நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

Monday, July 5, 2010

வெளியில் தெரியாத பங்களிப்பு

இன்றைய தினமணியில் வெளிவந்த புத்தக மதிப்புரைச் செய்தி இது.

ஒரு சில ஒப்பற்ற தலைவர்களின் பங்களிப்பு முழுமையாக வெளியில் தெரியாமல் போய் விடுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல, தீரர் சத்தியமூர்த்தி சிலம்புச்
செல்வர் ம.பொ.சி. போன்றவர்களின் பங்களிப்புகளும் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான் உண்மை. இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
"செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.யை சைவ வெள்ளாளராகவும். பெருந்தலைவர் காமராஜை நாடாராகவும், அறிஞர் அண்ணாவை முதலியாராகவும் ஜாதிக் கூண்டில் அடைக்க முற்படும் அவலம் அரங்கேறி வருகிறது
இந்த மாபெரும் தவறால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது "பசும்பொன்' தேவரின் புகழ்தான் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் ஒரு மிகப்பெரிய ஜமீன்தார். ஏகப்பட்ட நிலபுலன்கள். 19 வயதே நிரம்பிய முத்துராமலிங்கம் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவர் வந்தது சென்னையில்
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரம்.
1927-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நேதாஜி சுபாஷ் சந்தரபோஸ் சென்னை வந்திருந்தார். பிரபல காங்கிரஸ்காரராக இருந்த தேவரின் குடும்ப வழக்கறிஞர் ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் வேண்டுகோளுக்கு இணங்க, விருந்தினராக வந்திருந்த நேதாஜிக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு
தேவருக்குக் கிடைத்தது. அன்று அவர்களிடம் ஏற்பட்ட நட்பு குரு - சிஷ்ய மனோபாவம் கடைசி வரை தொடர்ந்தது என்பதுதான் சரித்திரம்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. சில மறைக்கப்பட்டன. பல மறக்கடிக்கப்பட்டன. அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், இலக்கியம் என்று தேவரின் ஆளுமை விரிந்து பரந்தது மட்டுமல்ல, ஆழங்கால் பட்டதும் கூட.
தமிழக சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகளும் அவர் எழுப்பிய கேள்விகளும் நாடாளுமன்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் மேற்கோள் காட்டப்படவேண்டியவை.
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றதுடன் ஒரு துறவி போன்று தன்னை முழுமையாக சமுதாயப் பணிக்கு அர்ப்பித்துக் கொண்ட மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பது வெளியில் தெரியாமல் போனதற்கு முக்கியமான காரணம் அவருக்குப் பூசப்பட்ட ஜாதி முலாம்தான் என்று தோன்றுகிறது.
ஆர். சக்திமோகன் நடத்தி வந்த "கண்ணகி' இதழில் பசும்பொன் தேவர் எழுதிய கட்டுரைகள் கே. ஜீவபாரதியால் தொகுக்கப்பட்டு "பசும்பொன் தேவரின் கட்டுரைகள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அதில் தேவர் எழுதி இருக்கும் கட்டுரைகளைப் பார்த்தாலே நாம் அதிர்ந்து விடுவோம், பசும்பொன் தேவருக்கு இத்தனை பரிமாணங்களா என்று.
"பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சி.', "கிழக்காசியாவும் வருங்காலமும்', "காஷ்மீரில் மூன்று பாகிஸதான்', "பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள் கொடுத்தவனும் முட்டாள்', "வட அட்லாண்டிக் மாநாடு', "பண வீக்கமும், உணவுக் கொடுமையும்' "ஜெனிவா மாநாடும், மத்தியக் கிழக்கும்', மாசேதுங்கின் மாஸ்கோ பயணம் என்று பல கட்டுரைகள்.போதாக்குறைக்கு பசும்பொன் தேவரின் நேதாஜி பற்றிய பேட்டியும்இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.
இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பண்முக ஆளுமையை வெளிப்படுத்தியதற்கு ஜீவபாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழகத்தின் முதல்வராக இருப்பதற்கான எல்லாத் தகுதிகளும் இருந்த மாமனிதர் பசும்பொன் தேவர் என்பதை ஜாதிக் கண்ணாடியை அகற்றி விட்டுப் பார்த்தால் மட்டுமே புரியும்.
நன்றி
தினமணி (4-7-2010)

3 comments:

Sivaprathap said...

thanks for blog.It should be read by all Thevars.I have some photos if u need take it from www.flickr.com/photos/sivas

jairamPasumpon said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி பிரதாப்.

Anonymous said...

Thanks jairam..ur doing wonderful job for all Thevars.

Post a Comment