நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

Wednesday, July 7, 2010

வீரத்திருமகனின் புகழை அழிக்க அன்று நடந்த அரசியல் சதி!

விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தில் கட்சி அரசியலின் தரம் தாழ்ந்த ஒரு விளைவாக எழுந்தது "இம்மானுவேல் கொலை வழக்கு.''


1957 ம் வருடம் பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அரசு அமைந்தது. முதலமைச்சராக காமராஜர் அவர்கள் இருந்தார். எம். பக்தவத்சலம் உள்துறை அமைச்சர்.

பொதுத் தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு இராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் முக்குலத்தோருக்கும், ஹரிஜனங்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வெட்டு, குத்து, தீவைப்புச் சம்பவங்கள் நடந்தன.

இராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் 10-9-1957 அன்று முதுகுளத்தூரில் "அமைதி மாநாடு'' ஒன்றைக் கூட்டி அனைத்துத் தரப்பினரையும் அதற்கு அழைத்திருந்தார். விடுதலைப் போராட்டப் பெரு வீரரும், சிறந்த தேசியத் தலைவருமான முத்துராமலிங்கத் தேவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

"எல்லா மக்களும் நம் மக்கள். நமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. சமரசம் ஏற்படுவதற்காக நான் எந்த விதமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறேன்.''என்று முத்துராமலிங்கத் தேவர் பேசினார் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்üட்ட பலரும் அவரது உரையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் என்றும் அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது.

அந்த மாநாட்டில் ஹரிஜன மக்களின் சார்பில் இம்மானுவேல் என்ற இளைஞர் பேசினார்.

11-9-1957 அன்று இரவு 9.30 மணி அளவில் பரமக்குடியில் இம்மானுவேல் பரிதாபமாகப் படு கொலை செய்யப்பட்டார். அவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்துப் பல விதமான வதந்திகள் உலவின.

அப்போது, தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையை எதிர்த்தவர்கள், காங்கிரஸி-ருந்து விலகி "காங்கிரஸ் சீர்திருத்தக் குழு'' (சி. ஆர். சி.) என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்தக் குழுவின் சார்பில் 28-9-1957 அன்று மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. மக்கள் வகுப்பு மோதல்களில் ஈடுபடாமல் அமைதியாக வாழ வேண்டும் என்று அந்த மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவரும், பிறரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.



அந்த மாநாடு நடந்து முடிந்ததும் அதற்கு அடுத்த நாள் 29-9-1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழகத்தில் ஒரு மாபெரும் புயலையே எழுப்பியது. அரசியலில் அவரது செல்வாக்கு ஓங்கி வளர்ந்திருந்ததாலும், தென் மாவட்டங்கள் அவரது கோட்டையாகவே விளங்கின என்பதாலும், அவரை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதற் காகவே அன்றைய காங்கிரஸ் ஆட்சியினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று பெரிதும் பேசப்பட்டது.

2-11-1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் மீதும், மற்றும் பதினோரு பேர் மீதும் ஒரு குற்றப் பத்திரிகை பரமக்குடி கீழ் நிலை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது. இம்மானுவேலைக் கொலை செய்வதற்காக முதல் எதிரியான முத்துராமலிங்கத் தேவரும், இதர 11 எதிரிகளும் சதித் திட்டம் வகுத்தார்கள் என்றும், அந்தச் சதித் திட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது எதிரி முதல், பனிரெண்டாவது எதிரி வரையிலான பதினோரு எதிரிகள் 11-9-1957 அன்று இரவு 9.30 மணி அளவில் பரமக்குடியில் இம்மானுவேலைக் கொலை செய்தார்கள் என்றும் அந்த ஆரம்பக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டதும், அவர் எந்தவிதக் காரணங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்ற விவரங்களை 28-9-1957 தேசிய குறிப்பு ஒன்றில் அரசு கூறியிருந்தது.

"இராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10-9-1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஒரு ஹரிஜன் முன் வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும், முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது.

"முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்'' என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டிய போது கேட்டார்'' என்று, தடுப்புக் காவலில் வைத்த காரணங்களை விவரிக்கும் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இம்மானுவேல் கொலைக்காகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத்தான் முத்துராமலிங்கத்தேவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெளிவாகிறது. ஆரம்பக்குற்றப் பத்திரிகை 2-11-57 அன்று சமர்ப் பிக்கப்பட்ட பிறகும் அவரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்தது கெட்ட நோக்கத்துடன் கூடியது என்றும், சட்ட விரோதமானது என்றும் ஒரு மனு அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. ஆனால் அந்த மனு 18-2-1958 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டார்.



முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஓர் அதிசயமான வீர புருஷர். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டு பல முறை பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

அவர் தமிழகத்தின் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார். அவரது பேச்சில் சூறாவளிக் காற்று சுழன்று வீசும்.

அந்தக் காலத்தில் அவரது பேச்சைக் கேட்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள்.

அவர் ஆழமான தெய்வ பக்தர். அவரது நெற்றியில் திருநீறு அலகாகத் துலங்கிக் கொண்டிருக்கும். முருகப் பெருமானிடம் அவருக்கு முரட்டுத் தனமான ஈடுபாடு. ஆலயங்களில், அல்லது விழாக்களில் முத்துராமலிங்கத் தேவர் பேசுகிறார் என்றால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான பணியாக இருக்கும். அவர் ஒரு துறவி போலவே விளங்கினார்.

இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர் மீது ஒரு பக்தியே இருந்தது. பலர் அவரைக் கண்டவுடன் விழுந்து கும்பிடுவார்கள்.

முத்துராமலிங்கத் தேவர் பெரும் பணக்காரக் குடும்பத்தில் தோன்றியவர். அவ ருக்குச் சொந்தமாக சுமார் நாற்பது கிராமங்கள் இருந்தன. ஆனால், அந்த மாபெரும் மனிதர் தமது சொத்துக் குறித்து, வருவாய் என்ன, செலவு எவ்வளவு என்ற விவரம் குறித்து ஒரு போதும் கவனம் செலுத்தியதே கிடையாது.

முத்துராமலிங்கத் தேவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். உடைகளைத் துவைத்து அணிவதையே அவர் விரும்பினார். சலவைக்குத் துணிகளைப் போடமாட்டார். நேதாஜி அவர்களிடம் முத்துராமலிங்கத் தேவருக்கு பெரும் பற்றும் மரியாதையும் அமைந்திருந்தன.

முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது வட்டாரத்தினரின் தலைவர் என்று விவரிப்பது பிழை. அவர் மக்கள் அனைவரின் மரியாதைக்கும் உரிய மாபெரும் தலைவராகவே திகழ்ந்தார்.

தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றுக்கு ஒரு வடிவமாக விளங்கிய முத்து ராமலிங்கத் தேவர் அவர்கள், இம்மானுவேல் கொலை வழக்கில் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதைத்தான் விதியின் திருவிளையாடல் என்பதோ...?

இம்மானுவேல் கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எம். அனந்தநாராயணன் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கை அரசுத் தரப்பில் நடத்த அரசு வழக்கறிஞராக எதிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிய பல வழக்கறிஞர்கள் தயங்கினார்கள். மிரட்டல் கடிதங்கள் வரும். திருநெல்வேலி, திருச்சி பகுதியைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞராக இருக்க இயலாது என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். முத்துராமலிங்கத்தேவரின் சார்பில் வாதாடுவதற்காகப் பிரபல வழக்கறிஞர் வி.ராஜகோபாலாச்சாரியார் அமர்த்தப்பட்டிருந்தார்.

விசாரணை ஆரம்பம் ஆனது. முத்துராமலிங்கத் தேவர் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவரைப் பார்ப்பதற்கும், விசாரணையைக் கவனிப்பதற்கும் திரண்டிருந்தார்கள். மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.

அரசு வழக்கறிஞர் எதிராஜ் அவர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததும் நீதிபதி யைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். "நீதிபதி அவர்களே, முத்துராமலிங்கத் தேவர் மக்களின் அன்புக்குரிய ஒரு தலைவர். ஏராளமான மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உள்ளார். விசாரணைக் காலத்தில் அவர் நின்று கொண்டே இருப்பது சரியாகத் தோன்றவில்லை. அவர் அமருவதற்குத் தயவு செய்து ஒரு நாற்காலியை அவர் நிற்குமிடத்தில் போட ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். தேவர் அவர்கள் அமருவதற்கு வசதியாக ஒரு நாற்காலியைப் போடுமாறு நீதிபதி உத்தரவிட்டார். நாற்காலி கொண்டு வரப்பட்டது. தேவர் அதில் அமர்ந்தார்.

அரசு வழக்கறிஞரின் இந்த நல்லெண்ண நடவடிக்கையை வரவேற்கும் வகையில் நீதிமன்றத்தில், மரபையும் மீறி, பலத்த கைதட்டல் எழுந்தது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் நியாய உணர்வுடன் நடந்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையை, அந்தச் செயல் முத்துராமலிங்கத் தேவரின் ஏராளமான ஆதர வாளர்களிடையே உண்டாக்கி விட்டது.

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கிய மானதாக முதலில் கருதப் பட்டது. அவர் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 88. அவர் முத்துராமலிங்கத் தேவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்.

அந்த வழக்கில் பெருமாள் பீட்டர் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராகச் சாட்சி அளித்தார். "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே, நீங்கள் மறவர்களா என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்'' என்று நீதிமன்றத்தில் பெருமாள் பீட்டர் தமது சாட்சியத்தில் கூறினார். விசாரணை முடிந்து வாதங்களைத் தொடங்க வேண்டிய கட்டம் வந்தது.

அரசு வழக்கறிஞர் எதிராஜ் எவ்வாறு வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்கப் பெருங்கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் திரண்டது.

எதிராஜ், அவருக்கே உரிய முறையில் வாதங்களை எடுத்துரைக்கத் தொடங்கினார். பெருமாள் பீட்டரின் சாட்சியத்தை நான் ஒப்புக் கொண்டால், என்ன குற்றம் நிகழ்ந்ததாகும்...? என்று நீதிபதி குறுக்கிட்டுக் கேட்டார்.

"ஒரு குற்றமும் நிகழ்ந்ததாகவும் ஆகாது'' என்று எதிராஜ் நிதானமாக, ஆனால் உறுதியாகப் பதிலளித்தார். நியாய உணர்வுடன் அரசு வழக்கறிஞர் வழங்கிய அந்தப் பதிலை நீதிபதி குறித்துக் கொண்டார். இரு தரப்பு வாதங்களும் முடிந்தன. பெருமாள் பீட்டரின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

எனினும் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக எந்த விதமான குற்றச் சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்து அவரை விடுதலை செய்தார். முத்துராமலிங்கத் தேவரைத் தண்டிப்பதற்கு அரசு சார்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அரசு வழக்கறிஞர் எதிராஜே பெருந்தன் மையுடனும், நேர்மை உணர்வுடனும் ஒப்புக் கொண்டதைப் பலரும் வியந்து பாராட்டினார்கள்.

இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் அவர்கள் எவருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கி நடக்கவில்லை. அவர் பாரபட்ச நோக்கு இல்லாமல் சட்டப்படி மட்டுமே தமது நிலையை நிர்ணயித்துக் கொண்டார். இறுதியில் நீதி வென்றது.

-வரலாறு படைத்த வழக்கறிஞர் வி.எல்.எதிராஜ், நூலிலிருந்து...

இந்தக் கட்டுரை குறித்த விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி!

No comments:

Post a Comment