நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

Tuesday, November 2, 2010

தேவர் நினைவிடத்தில் தங்கக் கவசம்

மதுரை, அக். 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் தங்கக் கவசம் அமைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.


பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறியது:

தேவர் நினைவிடத்துக்கு முதன்முதலில் வந்த அரசியல் தலைவர் நானாகத்தான் இருக்கும். அதன் பிறகே இங்கு மற்றவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை. இங்கே அரசியல் பேசக்கூடாது. தேவர் பெருமகனார் பெயரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பதால், அவரது நினைவிடத்தில் தங்கக் கவசம் அணிவிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆகவே, அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜெயலலிதா வருகையை முன்னிட்டு போலீஸôர் மேற்கொண்ட பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, திருப்தி என்றார் ஜெயலலிதா.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வந்தார். பின்னர் மதுரை திரும்பி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Wednesday, July 7, 2010

வீரத்திருமகனின் புகழை அழிக்க அன்று நடந்த அரசியல் சதி!

விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தில் கட்சி அரசியலின் தரம் தாழ்ந்த ஒரு விளைவாக எழுந்தது "இம்மானுவேல் கொலை வழக்கு.''


1957 ம் வருடம் பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அரசு அமைந்தது. முதலமைச்சராக காமராஜர் அவர்கள் இருந்தார். எம். பக்தவத்சலம் உள்துறை அமைச்சர்.

பொதுத் தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு இராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் முக்குலத்தோருக்கும், ஹரிஜனங்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வெட்டு, குத்து, தீவைப்புச் சம்பவங்கள் நடந்தன.

இராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் 10-9-1957 அன்று முதுகுளத்தூரில் "அமைதி மாநாடு'' ஒன்றைக் கூட்டி அனைத்துத் தரப்பினரையும் அதற்கு அழைத்திருந்தார். விடுதலைப் போராட்டப் பெரு வீரரும், சிறந்த தேசியத் தலைவருமான முத்துராமலிங்கத் தேவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

"எல்லா மக்களும் நம் மக்கள். நமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. சமரசம் ஏற்படுவதற்காக நான் எந்த விதமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறேன்.''என்று முத்துராமலிங்கத் தேவர் பேசினார் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்üட்ட பலரும் அவரது உரையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் என்றும் அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது.

அந்த மாநாட்டில் ஹரிஜன மக்களின் சார்பில் இம்மானுவேல் என்ற இளைஞர் பேசினார்.

11-9-1957 அன்று இரவு 9.30 மணி அளவில் பரமக்குடியில் இம்மானுவேல் பரிதாபமாகப் படு கொலை செய்யப்பட்டார். அவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்துப் பல விதமான வதந்திகள் உலவின.

அப்போது, தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையை எதிர்த்தவர்கள், காங்கிரஸி-ருந்து விலகி "காங்கிரஸ் சீர்திருத்தக் குழு'' (சி. ஆர். சி.) என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்தக் குழுவின் சார்பில் 28-9-1957 அன்று மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. மக்கள் வகுப்பு மோதல்களில் ஈடுபடாமல் அமைதியாக வாழ வேண்டும் என்று அந்த மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவரும், பிறரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.



அந்த மாநாடு நடந்து முடிந்ததும் அதற்கு அடுத்த நாள் 29-9-1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழகத்தில் ஒரு மாபெரும் புயலையே எழுப்பியது. அரசியலில் அவரது செல்வாக்கு ஓங்கி வளர்ந்திருந்ததாலும், தென் மாவட்டங்கள் அவரது கோட்டையாகவே விளங்கின என்பதாலும், அவரை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதற் காகவே அன்றைய காங்கிரஸ் ஆட்சியினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று பெரிதும் பேசப்பட்டது.

2-11-1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் மீதும், மற்றும் பதினோரு பேர் மீதும் ஒரு குற்றப் பத்திரிகை பரமக்குடி கீழ் நிலை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது. இம்மானுவேலைக் கொலை செய்வதற்காக முதல் எதிரியான முத்துராமலிங்கத் தேவரும், இதர 11 எதிரிகளும் சதித் திட்டம் வகுத்தார்கள் என்றும், அந்தச் சதித் திட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது எதிரி முதல், பனிரெண்டாவது எதிரி வரையிலான பதினோரு எதிரிகள் 11-9-1957 அன்று இரவு 9.30 மணி அளவில் பரமக்குடியில் இம்மானுவேலைக் கொலை செய்தார்கள் என்றும் அந்த ஆரம்பக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டதும், அவர் எந்தவிதக் காரணங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்ற விவரங்களை 28-9-1957 தேசிய குறிப்பு ஒன்றில் அரசு கூறியிருந்தது.

"இராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10-9-1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஒரு ஹரிஜன் முன் வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும், முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது.

"முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்'' என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டிய போது கேட்டார்'' என்று, தடுப்புக் காவலில் வைத்த காரணங்களை விவரிக்கும் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இம்மானுவேல் கொலைக்காகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத்தான் முத்துராமலிங்கத்தேவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெளிவாகிறது. ஆரம்பக்குற்றப் பத்திரிகை 2-11-57 அன்று சமர்ப் பிக்கப்பட்ட பிறகும் அவரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்தது கெட்ட நோக்கத்துடன் கூடியது என்றும், சட்ட விரோதமானது என்றும் ஒரு மனு அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. ஆனால் அந்த மனு 18-2-1958 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டார்.



முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஓர் அதிசயமான வீர புருஷர். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டு பல முறை பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

அவர் தமிழகத்தின் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார். அவரது பேச்சில் சூறாவளிக் காற்று சுழன்று வீசும்.

அந்தக் காலத்தில் அவரது பேச்சைக் கேட்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள்.

அவர் ஆழமான தெய்வ பக்தர். அவரது நெற்றியில் திருநீறு அலகாகத் துலங்கிக் கொண்டிருக்கும். முருகப் பெருமானிடம் அவருக்கு முரட்டுத் தனமான ஈடுபாடு. ஆலயங்களில், அல்லது விழாக்களில் முத்துராமலிங்கத் தேவர் பேசுகிறார் என்றால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான பணியாக இருக்கும். அவர் ஒரு துறவி போலவே விளங்கினார்.

இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர் மீது ஒரு பக்தியே இருந்தது. பலர் அவரைக் கண்டவுடன் விழுந்து கும்பிடுவார்கள்.

முத்துராமலிங்கத் தேவர் பெரும் பணக்காரக் குடும்பத்தில் தோன்றியவர். அவ ருக்குச் சொந்தமாக சுமார் நாற்பது கிராமங்கள் இருந்தன. ஆனால், அந்த மாபெரும் மனிதர் தமது சொத்துக் குறித்து, வருவாய் என்ன, செலவு எவ்வளவு என்ற விவரம் குறித்து ஒரு போதும் கவனம் செலுத்தியதே கிடையாது.

முத்துராமலிங்கத் தேவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். உடைகளைத் துவைத்து அணிவதையே அவர் விரும்பினார். சலவைக்குத் துணிகளைப் போடமாட்டார். நேதாஜி அவர்களிடம் முத்துராமலிங்கத் தேவருக்கு பெரும் பற்றும் மரியாதையும் அமைந்திருந்தன.

முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது வட்டாரத்தினரின் தலைவர் என்று விவரிப்பது பிழை. அவர் மக்கள் அனைவரின் மரியாதைக்கும் உரிய மாபெரும் தலைவராகவே திகழ்ந்தார்.

தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றுக்கு ஒரு வடிவமாக விளங்கிய முத்து ராமலிங்கத் தேவர் அவர்கள், இம்மானுவேல் கொலை வழக்கில் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதைத்தான் விதியின் திருவிளையாடல் என்பதோ...?

இம்மானுவேல் கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எம். அனந்தநாராயணன் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கை அரசுத் தரப்பில் நடத்த அரசு வழக்கறிஞராக எதிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிய பல வழக்கறிஞர்கள் தயங்கினார்கள். மிரட்டல் கடிதங்கள் வரும். திருநெல்வேலி, திருச்சி பகுதியைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞராக இருக்க இயலாது என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். முத்துராமலிங்கத்தேவரின் சார்பில் வாதாடுவதற்காகப் பிரபல வழக்கறிஞர் வி.ராஜகோபாலாச்சாரியார் அமர்த்தப்பட்டிருந்தார்.

விசாரணை ஆரம்பம் ஆனது. முத்துராமலிங்கத் தேவர் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவரைப் பார்ப்பதற்கும், விசாரணையைக் கவனிப்பதற்கும் திரண்டிருந்தார்கள். மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.

அரசு வழக்கறிஞர் எதிராஜ் அவர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததும் நீதிபதி யைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். "நீதிபதி அவர்களே, முத்துராமலிங்கத் தேவர் மக்களின் அன்புக்குரிய ஒரு தலைவர். ஏராளமான மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உள்ளார். விசாரணைக் காலத்தில் அவர் நின்று கொண்டே இருப்பது சரியாகத் தோன்றவில்லை. அவர் அமருவதற்குத் தயவு செய்து ஒரு நாற்காலியை அவர் நிற்குமிடத்தில் போட ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். தேவர் அவர்கள் அமருவதற்கு வசதியாக ஒரு நாற்காலியைப் போடுமாறு நீதிபதி உத்தரவிட்டார். நாற்காலி கொண்டு வரப்பட்டது. தேவர் அதில் அமர்ந்தார்.

அரசு வழக்கறிஞரின் இந்த நல்லெண்ண நடவடிக்கையை வரவேற்கும் வகையில் நீதிமன்றத்தில், மரபையும் மீறி, பலத்த கைதட்டல் எழுந்தது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் நியாய உணர்வுடன் நடந்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையை, அந்தச் செயல் முத்துராமலிங்கத் தேவரின் ஏராளமான ஆதர வாளர்களிடையே உண்டாக்கி விட்டது.

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கிய மானதாக முதலில் கருதப் பட்டது. அவர் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 88. அவர் முத்துராமலிங்கத் தேவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்.

அந்த வழக்கில் பெருமாள் பீட்டர் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராகச் சாட்சி அளித்தார். "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே, நீங்கள் மறவர்களா என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்'' என்று நீதிமன்றத்தில் பெருமாள் பீட்டர் தமது சாட்சியத்தில் கூறினார். விசாரணை முடிந்து வாதங்களைத் தொடங்க வேண்டிய கட்டம் வந்தது.

அரசு வழக்கறிஞர் எதிராஜ் எவ்வாறு வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்கப் பெருங்கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் திரண்டது.

எதிராஜ், அவருக்கே உரிய முறையில் வாதங்களை எடுத்துரைக்கத் தொடங்கினார். பெருமாள் பீட்டரின் சாட்சியத்தை நான் ஒப்புக் கொண்டால், என்ன குற்றம் நிகழ்ந்ததாகும்...? என்று நீதிபதி குறுக்கிட்டுக் கேட்டார்.

"ஒரு குற்றமும் நிகழ்ந்ததாகவும் ஆகாது'' என்று எதிராஜ் நிதானமாக, ஆனால் உறுதியாகப் பதிலளித்தார். நியாய உணர்வுடன் அரசு வழக்கறிஞர் வழங்கிய அந்தப் பதிலை நீதிபதி குறித்துக் கொண்டார். இரு தரப்பு வாதங்களும் முடிந்தன. பெருமாள் பீட்டரின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

எனினும் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக எந்த விதமான குற்றச் சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்து அவரை விடுதலை செய்தார். முத்துராமலிங்கத் தேவரைத் தண்டிப்பதற்கு அரசு சார்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அரசு வழக்கறிஞர் எதிராஜே பெருந்தன் மையுடனும், நேர்மை உணர்வுடனும் ஒப்புக் கொண்டதைப் பலரும் வியந்து பாராட்டினார்கள்.

இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் அவர்கள் எவருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கி நடக்கவில்லை. அவர் பாரபட்ச நோக்கு இல்லாமல் சட்டப்படி மட்டுமே தமது நிலையை நிர்ணயித்துக் கொண்டார். இறுதியில் நீதி வென்றது.

-வரலாறு படைத்த வழக்கறிஞர் வி.எல்.எதிராஜ், நூலிலிருந்து...

இந்தக் கட்டுரை குறித்த விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி!

Tuesday, July 6, 2010

வையகம் புகழும் வேந்தே!

தேவர் திருமகனைப் பற்றி
டி.வி.பச்சையப்பன் எழுதிய என்னைக் கலங்கடித்த பாடல் ஒன்று
இதோ வாசகர்களுக்காக...


தொகையறா
வையகம் புகழும் வேந்தே! வண்டமிழர் குல விளக்கே!
தென்னகத்து வீரசிங்கம்! தென்பாண்டி வீரமுத்தே!
வையகம் காண்பதெப்போ வைரமுத்து ராமலிங்கம்!
சோகம் நிறைந்தகதை சொன்னாலும் முடிவதில்லை!

பாடல்
தென்னாட்டு வீரசிங்கம் தேவர்முத்து ராமலிங்கம்
மக்களைத் தவிக்கவிட்டு மரணமான சேதிகேட்டு
மனங் கலங்கிட லானோம்-அந்த
மலர்ந்த முகத்தக் காணோம்

மாநிலத்து மாவீரன் நல்லமுத்து ராமலிங்கம்
நான்மாடக் கூடல்என்ற நலமான மதுரையிலே
நம்மை விட்டுப் பிரிந்தார்-அய்யோ
நலிந்து மக்கள் துடித்தார்

வீரனுக்கு வீரனாவார் வேந்தனுக்குத் தலைவனாவார்
அஞ்சாத வீரனாவார் ஐம்பத்தாறு வயதுமாவார்
அவனி புகழ் வாழ்ந்தார்-நல்ல
அமர வாழ்வு கொண்டார்

உலகத்தில் மூத்தகுடி உத்தமர்கள் வாழ்ந்தகுடி
அறம்பொருள் இன்பம் பேசி அவனியிலே வாழ்ந்தகுடி
அருமை யான நாடு- தமிழ்
அறிஞர் போற்றும் நாடு

தெய்வபக்தர் உக்ரபாண்டித் தேவர்பெற்ற வீரமகன்
காலமான சேதிகேட்டு காண்பதெப்போ என்றுமக்கள்
இதயங் கலங்க லாச்சு- நம்ம
இன்ப வாழ்வு போச்சு

மங்காத வீரமகன் மதுரை மகாலட்சுமி மில்லில்
பாட்டாளி துயரைக்கண்டு பக்குவமாய் நீதிகேட்டு
வெற்றி வாகை பெற்றார்- நல்ல
வீர ராக வாழ்ந்தார்

வெள்ளையரின் ஆதிக்கத்தை விரட்டியடிக்க வேணுமுன்னு
வீறுகொண்ட தேவர்மகன் ஆவேசமாய்க் குதித்தார்
ஆங்கி லேயரை எதிர்த்தார்- தேவர்
அறிஞ ராக வாழ்ந்தார்

மக்களின்றி மனைவியின்றி மனசுக்குள்ளே கபடமின்றி
மாசில்லாத சேவைசெய்து மாண்டும் தெய்வமானார்
மனங் கலங்கிடும் துயரம்- மக்களின்
இருந்து கேளும் விவரம்

புதுக்கோட்டை நகரத்திலே பொல்லாத சிறையினிலே
பொய்யாகக் கேசுபோட்டு பூட்டினார்கள் உள்ளே
தங்கஉடம்பு கெட்டுப் போச்சு- பார்த்த
மக்கள் தவிக்க லாச்சு
பொல்லாத நோயினிலே பொன்னான மேனிகெட்டு
மாவீரன் இல்லத்திலே மாறாத கவலைப்பட்டு
நாளுக்கு நாள் மெலிந்தார்- அறிந்த
நாட்டு மக்கள் துடித்தார்

ஐந்துமாசம் மதுரையிலும் அதன்பிறகு வேலூரிலும்
செய்துவந்த சிகிச்சையிலே சிறிதளவு குணமடைந்தார்
தெம்பு பெற்று நடந்தார்- தேவர்
திருந கரிலே இருந்தார்

மதுரை மாநகரத்திலே மகிழ்ச்சியோடு இருக்கையிலே
மறுபடி உடல்நிலையும் மோசமாகிப் போச்சு- அய்யோ
மாளும் நிலைமையாச்சு- மதுரை
சோக நிலை யாச்சு

எல்லாம் ஒடுங்கிப்போச்சு செவ்வாய்க் கிழமையாச்சு
தேதிஇருபத் தொன்பதாச்சு விடியக்கால நேரமாச்சு
ஆவி பிரிய லாச்சு- இந்த
அகிலம் இருண்டு போச்சு

அறுபத்தி மூணாம்ஆண்டு அக்டோபர் மாதம் புதன்
திக்கெட்டும் பரவலாச்சு தேவர்மகன் இறந்தசேதி
கேட்டு மக்கள் துடித்தார்- அன்று
தேம்பி அழுது புரண்டார்

பசும்பொன்னில் அடக்கஞ்செய்யத் தேவர் சொன்ன சொல்லாதலால்
ஆம்புலன்ஸ் காரதனில் அதிவிரைவில் கொண்டுசென்றார்
ஆறாய் கண்ணீர் பெருக- மக்கள்
அழுது கண்ணீர் வடிக்க

வீரன் மாண்ட சேதிகேட்டு வேதனையால் மக்கள்வெள்ளம்
லாரி,பஸ்ஸில்,சைக்கிள்,பிளசர்,ரயில்களிலும் வந்திடவே
சாரை சாரை யாக- மக்கள்
சாலை யிலும் நடந்தார்

தேவருக்கு ஆத்மதோழர் மூக்கைய்யாத் தேவரவர்
சீமைச்சாமி மலைச்சாமி சின்னக் கருப்பத்தேவர்
சிந்தை நொந்து கூட- மக்கள்
திரண்டு நின்று அழுக

மதுரைமுத்து என்னெம்மார் சுப்பு ராமன்
திரைநடிகர் எஸ்எஸ்ஸாரு அன்பழகன் என்வி நின்று
தேம்பித் தேம்பி அழுதார்- தேவருக்கு
இறுதி அஞ்சலி செய்தார்

தென்னாட்டுக் காந்திஅண்ணா புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்
காரைக்குடி கணேசன் கண்ணகி சக்திமோகன்
கண்ணீரைத் தான் சிந்த- அனைத்துக்
கட்சிக் கொடியும் இறங்க

மதுரைநகரத் தலைவர்வந்தார் மந்திரிராமையா கூடவந்தார்
தங்கமணி ராமமூர்த்தி சந்தானமும் கூடவந்தார்
சமுத்திரம் போல் ஜனங்கள்- தேவர்
திருமுகத் தினை வணங்க

சிவகங்கை ராமநாடு மன்னர்களும் வந்திருந்தார்
கடல் கடந்த மக்களெல்லாம் கதறித்தந்தி கொடுத்திடவே
காண எண்ணித் துடித்தார்-மக்கள்
கண் கலங்கி அழுதார்

பொழுது புலர்ந்ததப்பா புதன்கிழமை யானதப்பா
அழுது புரண்டார்கள் அய்யோஅய்யோ என்றுசொல்லி
சொர்க்க லோகத் தேரு- அங்கே
சொகுசா நிக்குது பாரு

போலீசுக் காவலாளி பொழுதெல்லாம் வேலைசெய்து
போக்கு வரத்துக்களை பொறுப்போடு செய்துவந்தார்
நடுப் பகலு மாச்சு- இரண்டு
மயில்கள் வரவு மாச்சு

பைந்தமிழர் கூடிவிட்டார் பல்லாக்கையும் தூக்கிவிட்டார்
நானிலத்து மாவீரன் நல்லமுத்து ராமலிங்கம்
வான லோகம் செல்ல- மக்கள்
மலரைத் தூவி வணங்க

பசும்பொன்னில் அடக்கம்செய்து பக்குவமாய் மேடை செய்தார்
நவம்பர் ஒன்னாந்தேதி நாட்டிலுள்ள கடைஅடைத்தார்
தேவரு டைய மரணம்- இந்தத்
தேசத்துக் கொரு துயரம்

Monday, July 5, 2010

வெளியில் தெரியாத பங்களிப்பு

இன்றைய தினமணியில் வெளிவந்த புத்தக மதிப்புரைச் செய்தி இது.

ஒரு சில ஒப்பற்ற தலைவர்களின் பங்களிப்பு முழுமையாக வெளியில் தெரியாமல் போய் விடுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல, தீரர் சத்தியமூர்த்தி சிலம்புச்
செல்வர் ம.பொ.சி. போன்றவர்களின் பங்களிப்புகளும் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான் உண்மை. இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
"செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.யை சைவ வெள்ளாளராகவும். பெருந்தலைவர் காமராஜை நாடாராகவும், அறிஞர் அண்ணாவை முதலியாராகவும் ஜாதிக் கூண்டில் அடைக்க முற்படும் அவலம் அரங்கேறி வருகிறது
இந்த மாபெரும் தவறால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது "பசும்பொன்' தேவரின் புகழ்தான் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் ஒரு மிகப்பெரிய ஜமீன்தார். ஏகப்பட்ட நிலபுலன்கள். 19 வயதே நிரம்பிய முத்துராமலிங்கம் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவர் வந்தது சென்னையில்
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரம்.
1927-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நேதாஜி சுபாஷ் சந்தரபோஸ் சென்னை வந்திருந்தார். பிரபல காங்கிரஸ்காரராக இருந்த தேவரின் குடும்ப வழக்கறிஞர் ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் வேண்டுகோளுக்கு இணங்க, விருந்தினராக வந்திருந்த நேதாஜிக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு
தேவருக்குக் கிடைத்தது. அன்று அவர்களிடம் ஏற்பட்ட நட்பு குரு - சிஷ்ய மனோபாவம் கடைசி வரை தொடர்ந்தது என்பதுதான் சரித்திரம்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. சில மறைக்கப்பட்டன. பல மறக்கடிக்கப்பட்டன. அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், இலக்கியம் என்று தேவரின் ஆளுமை விரிந்து பரந்தது மட்டுமல்ல, ஆழங்கால் பட்டதும் கூட.
தமிழக சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகளும் அவர் எழுப்பிய கேள்விகளும் நாடாளுமன்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் மேற்கோள் காட்டப்படவேண்டியவை.
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றதுடன் ஒரு துறவி போன்று தன்னை முழுமையாக சமுதாயப் பணிக்கு அர்ப்பித்துக் கொண்ட மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பது வெளியில் தெரியாமல் போனதற்கு முக்கியமான காரணம் அவருக்குப் பூசப்பட்ட ஜாதி முலாம்தான் என்று தோன்றுகிறது.
ஆர். சக்திமோகன் நடத்தி வந்த "கண்ணகி' இதழில் பசும்பொன் தேவர் எழுதிய கட்டுரைகள் கே. ஜீவபாரதியால் தொகுக்கப்பட்டு "பசும்பொன் தேவரின் கட்டுரைகள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அதில் தேவர் எழுதி இருக்கும் கட்டுரைகளைப் பார்த்தாலே நாம் அதிர்ந்து விடுவோம், பசும்பொன் தேவருக்கு இத்தனை பரிமாணங்களா என்று.
"பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சி.', "கிழக்காசியாவும் வருங்காலமும்', "காஷ்மீரில் மூன்று பாகிஸதான்', "பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள் கொடுத்தவனும் முட்டாள்', "வட அட்லாண்டிக் மாநாடு', "பண வீக்கமும், உணவுக் கொடுமையும்' "ஜெனிவா மாநாடும், மத்தியக் கிழக்கும்', மாசேதுங்கின் மாஸ்கோ பயணம் என்று பல கட்டுரைகள்.போதாக்குறைக்கு பசும்பொன் தேவரின் நேதாஜி பற்றிய பேட்டியும்இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.
இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பண்முக ஆளுமையை வெளிப்படுத்தியதற்கு ஜீவபாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழகத்தின் முதல்வராக இருப்பதற்கான எல்லாத் தகுதிகளும் இருந்த மாமனிதர் பசும்பொன் தேவர் என்பதை ஜாதிக் கண்ணாடியை அகற்றி விட்டுப் பார்த்தால் மட்டுமே புரியும்.
நன்றி
தினமணி (4-7-2010)